search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை விடுமுறை"

    • தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம் - தன்பாத் மற்றும் ஈரோடு - தன்பாத் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து வரும் 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாரந்திர சிறப்பு ரெயில் (06065) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06066) மறுநாள் இரவு 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இதேபோல, ஈரோட்டில் இருந்து வரும் 26, மே 3, 10, 17, 24, 31 மற்றும் ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06063) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 8.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, தன்பாத்தில் இருந்து வரும் 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06064) புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 2 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பார்மர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயில் (06097) வருகிற 28-ந் தேதி மற்றும் மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    அதே போல, பார்மரில் இருந்து சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06098) மே 3 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22663) மே 4, 11, 18 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) குண்டூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல் ஆகிய வழித்தடத்திற்கு பதிலாக, ரேணிகுண்டா, சுலேஹள்ளி, செகந்திராபாத், காசிபேட், பல்ஹர்ஷா ஆகிய வழித்தடத்தில் செல்லும்.

    அதே போல, ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22664) வருகிற 30-ந் தேதி மற்றும் மே 7, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மேற்குறிப்பிட்ட வழித்தடத்திலேயே செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழல் ஏற்படும்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டு தேர்வை நடத்தியது. அந்த அட்டவணைப்படி, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது.

    ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடந்த 10 மற்றும் 12-ந்தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இவர்களைத் தவிர 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    கல்வித் துறை மாற்றி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது.

    தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

    ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் கோடை காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    • அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும்.
    • மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    சென்னை:

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    இந்த நிலையில் கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

    இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது.

    இந்த புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
    • கடைசி கட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    ஆலந்தூர்:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    இதனால் சென்னையில் இருந்து மும்பை, அந்தமான், டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும் பயணிகள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அதிகரித்து உள்ளது.

    இதன்காரணமாக சென்னையில் இருந்து கோவா, மும்பை, கொல்கத்தா, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானத்தின் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. விமானத்தில் சென்றால் பயண நேரம் குறைவு என்பதால் அதிகமானோர் விமான பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மே மாதத்திற்கான விமானடிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து உள்ள நிலையில் கடைசிகட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.10ஆயிரத்து200, கோவா-ரூ.4500-ரூ.5200, மும்பை ரூ.4700-ரூ.7ஆயிரம் , ஜெய்ப்பூர்-ரூ.10ஆயிரத்து 200, ஸ்ரீநகர்-ரூ.12ஆயிரம் முதல் ரூ.17ஆயிரம், கொல்கத்தா-ரூ.6,700-ரூ.9ஆயிரம், கொச்சி-ரூ.3,200-ரூ.8ஆயிரம் வரை கட்டணமாக உள்ளது.இதேபோல் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.5ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும், தூத்துக்குடிக்கு ரூ.6200 முதல் ரூ.8 ஆயிரம் வரையும் கட்டணம் அதிகரித்து உள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
    • இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்ற நிலை உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    வந்தே பாரத் உள்ளிட்ட எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே நாளை (11-ந்தேதி) முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து வருகிற 12, 19, 26 ஆகிய நாட்கள் மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து வருகிற 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் வியாழக்கிழமை தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேருகிறது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட் விரைவாக புக்கிங் ஆனது. ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்தனர். இந்த மாதம் மட்டுமின்றி மே மாதத்திற்கும் இடங்கள் நிரம்பி விட்டன. இரண்டு வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 100 முதல் 200 வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.

    ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படுக்கைகள் மட்டும் ஒரு சில நாட்களில் காலியாக உள்ளன.

    தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் பயணத்தை விட கட்டணம் குறைவாக இருப்பதோடு இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதால் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அலை அலையாக திரண்டு வருகிறார்கள்.

    சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலும் முழு அளவில் செல்கிறது. தற்போது கோடை வெயில் வறுத்தெடுப்பதால் குளு குளு ஏசி வசதியுடன் சொகுசாக பயணம் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். இதனால் இந்த ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

    • கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் (வியாழக்கிழமை மட்டும்) புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் 12,19,26, மே 3, 10, 17, 24, 31 (வெள்ளிக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06069) அடுத்தநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.
    • தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.

    இந்த காலகட்டங்களில் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் வாரம் தோறும் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    திருப்பதியில் நேற்று 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.
    • கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது.

    மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த 2-ந்தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதியுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து விடுகிறது.

    அதனால் 9-ந்தேதி முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந் தேதிகளில் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகை இடையில் வருவதால், தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22, 23 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அடுத்த வாரத்தில் யுகாதி மற்றும் ரம்ஜான் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்தி முடிக்கின்றனர்.

    அதனால் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.

    தனியார் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனால் யுகாதி, ரம்ஜான் அரசு விடுமுறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு பள்ளிகளும் ஏப்ரல் 12-ந்தேதி வரை மட்டுமே செயல்படும். அதன் பின்னர் 2 நாட்கள் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைத்து இருப்பதால் உற்சாகமாக உள்ளனர். சொந்த ஊர்களுக்கும், உறவினர் இல்லத்திற்கும் செல்ல இப்போதே பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

    ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன் கோடை ஸ்தலங்களுக்கும், மலை பிரதேசங்களுக்கும் மற்றும் கோவில்களுக்கும் பயணத்தை தொடங்குகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பது பின்னர் முடிவு செய்யப்படுகிறது.

    • 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
    • இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.

    கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.

    இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.

    இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளிகளுக்கு முன் கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. ஏப்ரல் 12-ந்தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வு முடிவதால் 13-ந்தேதி முதல் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பஸ் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 800 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 1000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறை வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலால் முன் கூட்டியே விடுமுறை விடப்படுகிறது.

    இதன் காரணமாக வெளியூர் செல்லும்போது போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் ஏ.சி. பஸ் பயணம் அதிகரிக்கிறது. தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற நாட்களில் அதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயரும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 67 ஸ்பேர் பஸ்கள் உள்ளன. அவற்றையும் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்தாண்டு கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதனால் சிறப்பு பஸ்களை இயக்குகிறோம். மேலும் அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளதால் முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மாநகர பஸ்சில் செல்வதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வதற்கும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வீடுகளுக்கு செல்ல மாநகர பஸ் வசதியை பயன்படுத்தும் வகையில் ரூ.40 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×